நான் 1915-ல் ஆத்தூரில் பிறந்தவன். ஆத்தூரிலேயே 15 வயது வரை வாழ்ந்தவன். நான் சிறுபிள்ளையாய் இருக்கும் போது என்னுடைய நேரத்தை எல்லாம் அந்த காலத்தில் இருந்த ஆத்தூர் கெட்டி முதலி கோட்டையிலும், அரண்மனையிலும், நெற்களஞ்சியங்களிலும், விஷ்ணு கோயிலிலும், சிவன், முனியப்பன், செல்லியம்மன் கோயிலிலும், கோட்டையைச் சுற்றியுள்ள தாமரை, அல்லி நிறைந்த அகழியிலும், இராஜா கடைசி காலத்தில் இந்த நகரை விட்டு வெளியேறிய குகையிலும் நண்பர்களுடன் விளையாடியிருக்கிறேன்.

கெட்டி முதலிக்கு 7 கொப்பரை பணம் கிடைத்தது என்று சொல்லப்பட்ட கொப்பரைகளில் ஒரு கொப்பரையை நான் விஷ்ணு கோயிலில் பார்த்திருக்கிறேன்.

பெத்தநாயக்கன் பாளையத்தில் உள்ள பெரிய ஏரி, சமுத்திரம் என்று வர்ணிக்க கூடிய அளவில் தண்ணீர் இருக்கையில், ஆத்தூர் வஸிஷ்ட நதியில் ஓடும் சுத்தமான தண்ணீரை பருகுவோம், குளிப்போம், நீந்துவோம், வீட்டு உபயோகத்திற்கு கொண்டுபோவோம்.

அந்த நதிகரை முழுவதும் சென்னை மயிலாப்பூர் கடற்கரையில் உள்ளது போல சுத்தமான மணல் எங்கு பார்த்தாலும் இருக்கும். அங்கு விளையாடுவோம், நிலா சாப்பாடு சாப்பிட்டு இரவில் 12 மணிவரை சிறுவர்கள், பெரியவர்கள், குடும்பத்துடன் இளைப்பாறுவோம்.

ஆத்தூரின் பழைய ஞாபகமும், சாரித்திரமும் எனக்கு பெருமை அளிக்கிறது. என்னுடைய அக்காள் பள்ளிகூடம் செல்லுகையில், ஒரு மிகசிறிய பள்ளிகூடம் தான் இருந்தது. அந்த காலத்தில் ஒரு சிலர் மட்டுமே பெண்களை படிப்பதற்கு வாய்ப்பளித்தார்கள். இப்பொழுது விவசாயிகளின் பெண் குழந்தைகள் கூட வெகு தூரத்தில் உள்ள குடியிருப்பிலிருந்து, காலையில் எழுந்து குளித்து விட்டு, பூச்சூட்டி, நடந்தும், சைக்கிளிலும், என் வீட்டின் முன்னால், பெருமாணவிகள் (3400+) வெள்ளம் போல, இப்பொழுதுள்ள உயர்நிலைப்பள்ளிக்கு போவதை பார்ப்பது எனக்கு கண்கொள்ளா காட்சி, இது நம் நாட்டின் முன்னேற்றத்துக்கு ஓர் அத்தாட்சி.

அக்காலத்தில் தமிழ் நாட்டிலேயே அழகான கோட்டைகளில் ஆத்தூர் கோட்டையும் ஒன்று அதை கட்டியவர் கெட்டி முதலி. அவருடைய பெயரை இன்றைய சரித்திரத்துக்கு மேல் கொண்டு வருவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

இங்ஙனம்
கி.அப்பு
37, காந்தி நகர்
ஆத்தூர் - 636102