எஸ்.சித்தமலை

   ஆழ்கிணறுகளையும், வானத்தையுமே நம்பி வாழும் ஆத்தூர் விவசாயிகளின் ஜிவநாடி மரவள்ளி கிழங்கு தான். இக்கிழங்கு உலக அளவில் தென் அமெரிக்காவில் பிரேசில், கொலம்பிய, ஈக்வெடார் ஆப்பிரிக்காவில் சோமலி, கென்னியா, சூடான், மத்திய ஆப்பிரிக்கா, தென் கிழக்காசிய நாடுகளிலும், பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள வெப்பமண்டலக் காடுகளிலும் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் போர்த்துக்கீசியப் பாதிரியர்களால் முதன் முதலாக உணவுப் பயிராக கொண்டுவரப்பட்டது. மேற்கு கடற்கரை பிரதேசங்களில் பயிரிடப்பட்டது. இந்தியாவில் கேரளாவிலும், தமிழ் நாட்டிலும் மட்டுமே அதிக அளவில் பயிராகிறது. கிழங்கில் இருந்து ஸ்டார்ச், சேகோ(ஜவ்வரிசி) தயார் செய்கின்ற ஆலைகள் அனைத்தும் நமது மாவட்டத்தில் மட்டுமே உள்ளது. இவ்வனைத்து தொழிற்கூடங்களும் ஆத்தூர், சேலம், இராசிபுரம் என்ற அளவிலேயே அமைந்துள்ளன. தமிழ் நாட்டில் பரவலாக சேலம், தென்னாற்காடு, வடஆற்காடு, கோவை, தர்மபுரி மாவட்டங்களில் பயிரிட்டாலும், இவையனைத்தும் சேலம் மாவட்டத்தில் உள்ள ஆலைகளுக்கே அறுவடைக்கு பின் வரவேண்டியுள்ளது.


சுமார் முப்பதாயிரம் ஏக்கராவில் ஆத்தூர் வட்டத்தில் பயிராகி ஆண்டுதோறும் நமது ஊருக்கு ரூ 20 கோடி அளவில் இக்கிழங்கு வருவாய் ஈட்டித்தருகிறது. மிகச் சொற்ப அளவில் தண்ணீரைக் கொண்டு வளர்ந்த இந்த மண்ணுக்குள் மறைந்துள்ள வைரமானது தோண்டி எடுக்கப்பட்ட பிறகு விவசாயிகளுக்கும், பட்டைத் தீட்டிய பிறகு ஜவ்வரிசியாகவும், ஸ்டார்ச்சாகவும், மாறிய பிறகு தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில் முனைவோருக்கும், தொழிலாளிகளுக்கும் கனிசமான அளவில் லாபம் தருகிறது. மரவள்ளியின் ஒவ்வொரு பொருளும் பயன் தருபவையாக இருக்கிறது. தழை ஆடு, மாடுகளுக்கு உணவாகவும், சிலவகை பட்டுப்பூச்சி வளர்ப்புக்கும், குச்சி விறவாகவும், கிழங்கின் தோல் மற்றும் திப்பி மாடுகளுக்கு நல்ல உணவாகவும் சுவைத்தரும் சிப்ஸ்சாகவும், ஜவ்வரிசி உணவுப்பொருள், பாயசம், அப்பளம், புட்டிங் என்று பல்வேறு முறையில் பயன் படுகிறது. வட மாநிலங்களில் பெரிதும் பயன் படுத்தப்படுகிறது. ஸ்டார்ச் பெயிண்ட், வார்னிஸ், வெடி மருந்து பொருட்கள் தயாரிப்பதற்கும், இரசாயனத் தயாரிப்பிற்கும் மற்றும் பல்வேறு வகைகளிலும் பயன்படுகிறது.

       

ஒரு ஏக்கர் நஞ்செய் நிலத்திற்கு வேண்டிய தண்ணீரைக் கொண்டு நான்கு ஏக்கரில் மரவள்ளியை நல்ல முறையில் சாகுபடி செய்ய இயலும். புழு, பூச்சி தாக்குதல் இல்லாத மிக குறைந்த நிர்வாக முறையில் சாகுபடி செய்ய முடியும். சமீப காலத்தில் கருமந்துறை, கொல்லிமலை, பச்சைமலைப் பகுதியில் பயிரிடப்பட்டு, நல்ல மகசூல் தந்து அவர்களது பொருளாதாரத்தில் ஒரு குறிப்பிடதக்க மாறுதல் உண்டாக்கியுள்ளது.

ஸ்டார்ச் ஏற்றுமதி செய்ய வேண்டும். ஸ்டார்ச்சிலிருந்து மெத்தனால் வடித்து வாகனங்களுக்கு எரிபொருளாக பயன்படுத்த வேண்டும்.

சுகாதார முறையில் நவீன தொழில் நுட்பத்தை இத்தொழிலில் புகுத்தி புரதம் நிறைந்த சேகோவை உற்பத்தி செய்து மக்களிடையே அதிக அளவில் வரவேற்பை பெறுமாறு செய்து இதன் தேவையை அதிரிக்கச் செய்யவேண்டும்.

தூய்மை கேட்டை உண்டாக்கும் கழிவு நீரை விஞ்ஞானமுறையில் சுத்தம் செய்து, மண், நீர்வளம், மற்றும் சுற்றுப்புறம் கேடு அடையாவண்ணம் நடைமுறைப்படுத்தல் இத்தொழிலின் உடனடித் தேவையாகும்.