நவீன பல் பாதுகாப்பு சிகிச்சை முறைகள்
Rtn.Dr.S.முரளி, M.D.S.,
உடல் ஆரோக்கியத்திற்கும், வசீகரமாகத் தோன்றுவதற்கும், ருசியாக சாப்பிடுவதற்கும், நன்றாகப் பேசுவதற்கும் பற்கள் இன்றியமையாதவை. பற்களின்ஆரோக்யம் உடலின் ஆரோக்யம். நமது முகத்தைக் கண்ணாடி பிரதிபலிப்பது போல் உடலில் தோன்றும் பல நோய்களின் ஆரம்ப கட்ட அறிகுறிகளை வாய் மற்றும் பற்களில் ஏற்படும் இராசயன மாறுதல்களைக் கொண்டே கண்டுபிடித்துவிடலாம். எனவே நமது உடலின் ஆரோக்யத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியாக நமது வாய் மற்றும் பற்கள் விளங்குகின்றன. மருத்துவ உலகில் "Mouth is the Mirror of our Body" என்னும் வாசகம் மிகவும் பிரபலமானது. பல் போனால் சொல் போச்சு என்னும் தமிழ் பழமொழியும் நாம் அனைவரும் அறிந்த ஒன்று.
பற்களின் பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள நவீன சிகிச்சை முறைகள்
1) பல் சொத்தையும், சிகிச்சை முறையும்:
பற்களில் சொத்தை ஏற்பட்டவுடன் அதை கவனித்து பற்களை அடைத்துக் கொள்ள வேண்டும். பற்களை அடைப்பதற்கு சிமெண்ட, வெள்ளி, தங்கம் மற்றும் பல்வேறு உலோகக் கலவைகளும், காம்போசிட் ரெசின் என்னும் பிளாஸ்டிக் வகையைச் சேர்ந்த பொருட்களும் இருக்கின்றன. பல்லின் தன்மைக்கேற்ப தகுந்த பொருளைக் கொண்டு பல் மருத்துவர் சிகிச்சை அளிப்பார்.
2) உடைந்த பற்களும், பற்கூழ் சிகிச்சை முறையும்:
பற்கள் உடைந்தாலோ, பற்களின் மீது அடிப்பட்டாலோ, சில சமயங்களில் அப்பற்கள் நிறம் மாறிக் கொண்டே வரும். பார்ப்பதற்கு விகாரமாகவும், பற்களின் வேர்களைச் சுற்றிக் கிருமிகளும் பரவும். இதனால் உடலின் முக்கிய பாகங்கள் பாதிக்கப்படலாம்.
2.அ) பற்கூழ சிகிச்சை (ROOT CANAL TREATMENT)
இதற்கு பற்களின் உட்பக்கமாக வெளியே தெரியாமல் ஒரு துவாரம் போட்டு பழுதுபட்ட பற்கூழை (Pulp) எடுத்துவிட்டு அந்தப் பகுதியை அடைத்து விடுவோம். அதன் பின் பற்களின் மேல் பரப்பில் உள்ள எனாமல் பகுதியை தேய்த்து எடுத்துவிட்டு மற்ற பற்களின் நிறத்திலேயே பீங்கான மற்றும் பிளாஸ்டிக்கினால் ஒரு உறை செய்து நிரந்தரமாக இருக்கும்படி பொருத்தி விடலாம்.
2.ஆ) பற்கள் சிறிதளவே உடைந்திருந்தால் அதில் காம்போசிட் என்ற பொருளை வைத்து நீலநிற ஒளியைப் (Ultra Violet) பாய்ச்சி முழு பல்லாக கொண்டு வரமுடியும். இந்த நவீ£ன சிகிச்சைக்கு Light Cure Treatment என்று பெயர்.
2.இ) பற்கள் பெரும் பகுதி உடைந்திருந்தாலோ, பல்லை எடுக்கும் நிலை ஏற்பட்டாலோ, பல் எடுத்த இடத்திலேயே எலும்பில் ஒரு துளையிட்டு அந்த எலும்புக்குள் Titanium என்ற உலோகக் கலவையினால் ஆன ஒரு அங்குல (1 or 11/2 inch) நீளமுள்ள ஸ்க்ரூவைப் பொருத்தி விடுவார்கள். பின்னர் அதன் மேல் பீங்கானில் பல்லைப் போல ஒரு உறை செய்து நிரந்தரமாகப் பொருத்தி விடலாம். இதற்கு Implant பற்கள் (Teeth) என்று பெயர்.
3) பல் ஈறு நோய் மற்றும் சிகிச்சை முறை:
பற்களுக்கு இடையில் படியும் காரைகளினால் பற்களின் ஈறுகள் கெட்டு இரத்தம், சீழ் கசியும், வாய் துர்நாற்றம் ஏற்பட காரைகளும் ஒரு காரணம். மேலும், வெற்றிலை பாக்கு போடுவதாலும், புகை பிடிப்பதாலும் பொடி போடுவதாலும், பற்களில் கறை படியும். இதற்கு பற்களை சுத்தம் செய்ய வேண்டும். தற்போது Ultrasonic Scaler எனப்படும் எலக்ட்ரானிக் கருவியைப் பயன்படுத்தி எனாமல் பகுதியைப் பாதிக்காமல் பற்களில் படிந்துள்ள காரை மற்றும் கறைகளை நீக்கிவிடலாம்.
4) தாடை எலும்பு முறிவும், சிகிச்சையும்:
வாகனங்கள் மூலமாக விபத்து ஏற்படும் போது தாடை எலும்புகள் உடைந்து விடுவதும் உண்டு. உடைந்த தாடை எலும்பில் பற்கள் இருக்கும் போது மேல் பற்களையும், கீழ் பற்களையும் சரியான நிலையில் வைத்து கம்பிகள் மூலம் கட்டி உடைந்த எலும்புகளை சரியான நிலையில் பொருத்திவிடலாம்.
இப்போதுள்ள நவீன சிகிச்சை முறையில் உடைந்த தாடை எலும்புகளில் எவர்சில்வர் தகடுகளைப் பொருத்தி அவைகளை நிரந்தரமாக வைத்து விடுவார்கள். இந்த நவீன சிகிச்சை செய்வதால் உடனேயே வாயை திறந்து பேசவும், சாப்பிடவும் வசதியாக இருக்கும்.
3) வாய் புற்று நோய் மற்றும் சிகிச்சை முறை
வாய் புற்று நோய்க்கு 3 காரணங்கள் உள்ளன. அவையாவன.
SharpTeeth (கூர்மையான பற்கள்),
Sepsis (வாயில் சீழ் வடிதல்),
Spiced Food (கார வகை உணவுகள்),
Syphilis (பல்வினை நோய்),
Smoking (புகை பிடித்தல்).
மேற்கூறிய காரணங்களால் வாய்புற்றுநோய் வருவதால் ஒழுங்கான பழக்க வழக்கங்களை கடைபிடித்து, வெற்றிலை பாக்கு, புகையிலை தவிர்த்து, துலக்குவதற்கு மிருதுவான பொருட்களை உபயோகிப்பதாலும், அதிக காரவகை உணவுகளை தவிர்ப்பதாலும் புற்று நோய் வராமல் தடுக்கலாம்.
ஏதாவது ஒரு காரணத்தால் வாயில் புண் ஏற்பட்டால் அந்தப் புண் பத்து நாட்களுக்கு மேல் ஆறாமல் இருந்தால் கண்டிப்பாக பல் மருத்துவரை அணுகி அது புற்று நோயின் அறிகுறியா? என்று சோதித்து தேவையான சிகிச்சை மேற்கொள்வது அவசியம். ஆரம்பத்திலேயே கண்டு பிடித்து விட்டால் அறுவை சிகிச்சை மூலமாகவோ, கதிர்வீச்சு மூலமாகவோ, மாத்திரைகள் உட்கொள்வதன் மூலமாகவோ ஆரம்ப நிலையிலேயே புற்று நோயைக் குணப்படுத்தி விடலாம்.
6) ஒழுங்கற்ற பற்களும், பல்சீரமைப்பு சிகிச்சையும்:
குழந்தைப் பருவத்தில் கை சூப்பும் பழக்கத்தினாலும், நாக்கைத் துருத்திக் கொள்வதாலும், கீழுதட்டைக் கடிப்பதாலும், உறங்கும் போது வாயினால் மூச்சுவிடுவதாலும், பற்கள் தூக்கலாகவும், ஏறுமாறாகவும் அமைந்து விடுகின்றன. பற்களின் அமைப்பு ஒழுங்காக, வரிசையாக இல்லாமல் சீர்கெட்டு இருந்தால் முகத்தின் வசீகரம் குறையும்.
இதற்கு ஆர்த்தோடான்டிக் அப்ளையன்ஸ் எனப்படும் கிளிப் போட்டு சரி செய்யலாம். இந்த சிகிச்சை முறையில் நிறைய வகைகள் உண்டு.
இது வரை குறிப்பிட்டுள்ளவை சில நவீன பல் பாதுகாப்பு சிகிச்சை முறைகளாகும். நமது பற்களைப் பாதுகாத்துக் கொள்வதும், வாயை சுத்தமாக வைத்துக் கொள்வதும் நமது முக்கியக் கடமையாகும். வாய் சுத்தமாக இல்லாவிட்டாலும், பற்கள் பழுதாகி இருந்தாலும் நமது உடலில் முக்கிய உறுப்புகள் பாதிக்கப்பட்டு நமது உடல் ஆரோக்யம் கெடலாம். ஆதலால் ஒருவர் தன் உடல் நலத்தைக் காக்க விரும்பினால் வாய் மற்றும் பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளல் அவசியம்.