வெப்பத்தளர்ச்சி

கோடை வெயில் கொளுத்தத் தொடங்கி விட்டது. கடுமையான வெயிலைத் தாங்க முடியாமல் சாலையில் நடந்து செல்வோர் மயங்கி விழுகிற செய்திகள்  வரத் தொடங்கி விட்டன.  இனி குறைந்தது மூன்று மாதங்களுக்கு வெப்பத்தின் பாதிப்பு மக்களிடத்தில் மிகுதியாகவே காணப்படும்.தொடர்ந்து பல மணி நேரங்கள் வெயிலில் வேலை செய்பவர்களுக்குப் பதினான்கு வகையான வெப்ப நோய்கள் வரலாம்.

தோலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளில் அழுக்கு சேர்ந்து அடைத்துக் கொண்டால் வியர்க்குரு வரும்.  அதில் பாக்டரியா தொற்றிக் கொண்டால் வேனல்கட்டி வரும்.  பூஞ்சை அல்லது காளான் சேர்ந்து கொண்டால் அரிப்புடன் கூடிய படை, தேமல் தோன்றும், சூரியனின் புற ஊதாக் கதிர்கள் ஒத்துக் கொள்ளாதவர்களுக்கு ஒளி ஒவ்வாமை (photo allergy) உண்டாகும்.  சிலருக்கு வெப்பப் புண்கள் (Sun Burn) ஏற்படும்.  மேலும், வெப்பக் காய்ச்சல், வெப்பத் தாக்கு, வெப்பத் தளர்ச்சி, வெப்ப அதிர்ச்சி, வெப்ப மயக்கம், வெப்பத் தசைப்பிடிப்பு வலி போன்ற ஆபத்தான நோய்களும் வரலாம்.

வெப்பத் தளர்ச்சி:  காற்று மண்டலத்தில் நிலவும் வெப்பம் அதிகமாக அதிகமாக நம் உடலின் வெப்ப நிலையும் அதிகரிக்கிறது.  அப்போது மூளையில் இருக்கும் ஹைப்போ தலாமஸ் வியர்வையைப் பெரமளவில் சுரக்கச் செய்த அதிகப்படியான வெப்பத்தை வெளியேற்றுகிறது.  இதனால் உடல் வெப்பம் சீரான நிலையில் இருக்கிறது.

கோடையில் வெயிலின் கடுமை அதிகரிக்கும்போது சிலருக்கு ஹைப்போதலாமஸ் செயல் இழந்து விடுகிறது.  ஆகவே உடலின் வெப்பம் தணிய வழியில்லாமல், காயச்சல் அதிகரிக்கிறது.  அது 106 டிகிரி ஃபாரன்ஹீட் அளவைத் தாண்டும்போது வெப்பத் தளர்ச்சி உண்டாகிறது.

பாதிக்கப்பட்ட நபர் சோர்வாகக் காணப்படுவார்.  காய்ச்சல் அனலாய் கொதிக்கும்.  உடல் வலி, உடல் அசதி வாட்டும்.  உடல் தளர்ச்சி அடையும்.  மிகவும் களைப்பாக் காணப்படுவார் அளவுக்கு மீறிய வெப்பத்தின் காரணமாக உடலிலுள்ள நீரின் அளவும், உப்பின் அளவும் வெகுவாகக் குறைந்து விடுவதால்தான் இந்த அசதியும், தளர்ச்சியும் ஏற்படுகின்றன.

இச்சயமத்தில் பாதிக்கப்பட்டவரை குளிர்ச்சியான, நிழல் சூழ்ந்த இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்.  குளிர்ந்த நீரில் நனைத்தத் துணிகளை உடலின் மீது மூடவேண்டும்.  தண்ணீர், மோர், இளநீர், குளுக்கோஸ், உப்பு கலந்த நீர், எலுமிச்சைப் பழச்சாறு, பதனீர் போன்றவற்றில் எது கிடைக்கிறதோ, அந்தத் திரவ ஆகாரத்தை நிறையப் பருகக் கொடுக்க வேண்டும்.  இதனால் அசதி குறைந்து, தளர்ச்சி விடும், காய்ச்சல் தணியும்.

வெப்ப மயக்கம்:  நீண்ட நேரம் வெயிலில் நிற்பவர்கள, தோட்ட வேலை செய்பவர்கள் திடீரென மயக்கம் அடைவதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இராணுவத்தில் உள்ளவர்கள் வெயிலில் அதிக நேரம் பேரேடு செய்யும்போது இம்மாதிரியான வெப்ப மயக்கத்திற்கு உள்ளாவது வாடிக்கை.  இதற்குக் காரணம்,   வெயிலின் உக்கிரத்தினால் தோலிலுள்ள இரத்த நாளங்கள் விரிவடைந்து இடுப்புக்குக் கீழ் இரத்தம் தேங்குவதற்கு வழி செய்து விடுகிறது.  இதனால் இதயத்திற்கு இரத்தம் வருவது குறைகிறது.  இரத்த அழுத்தம் கீழிறங்குகிறது.  மூளைக்குப் போதுமான இரத்தம் செல்வதில்லை.  இந்நிலை நீடிக்கும்போது வெப்ப மயக்கம் உண்டாகிறது.

சில சமயங்களில் வெயில் மிகக் கடுமையாகத் தாக்கும்போது வெப்ப அதிர்ச்சி உண்டாகும்.  இது மிகவும் ஆபத்தான நிலை.  இந்நிலையில் உடலின் வெப்பநிலையைச் சமன் செய்யும் இயக்க முறைகள் அனைத்துமே சீர்குலைந்து விடுவதால் தலைச்சுற்றல், வாந்தி, மனக்குழப்பம், நினைவிழப்பு, கை கால் வலிப்பு போன்றவை ஏற்படும்.  இவற்றைத் தொடர்ந்து மூளை, இதயம், கல்லீரல், சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகள் பாதிக்கப்பட்டு மரணத்திற்கு வழிவகுக்கும்.

எனவே, வெப்ப அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டவரை உடனே குளிர்ச்சியான இடத்திற்கு அப்புறப்படுத்தி, குளிர்பானங்களையும், திரவ ஆகாரங்களையும் கொடுக்க வேண்டும்.  அம்மாதரியான ஆகாரங்களைப் பருகும் நிலையில் அவர் இல்லையென்றால், தாமதிக்காமல் மருத்துவரின் அவசரச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும், வேகமான சிகிச்சை   உயிரைக் காப்பாற்றும்: கால தாமதம் காலனை அழைக்கும்.

வெப்பத் தசைபிடிப்பு:  வெயிலில் அலைபவர்களுக்குத் தான் வெப்ப நோய்கள் வரும் என்பதில்லை.  வீட்டில், அலுவலகத்தில் இருப்பவர்களுக்கும் வெப்ப நோய்களின் பாதிப்பு ஏற்படாலம்.  வெயில் காலத்தில் பொதுவாகவே நிறைய வியர்க்குமல்லவா?  அதனால் உடலிலுள்ள திரவமும், சில முக்கியமான தாதுப் பொருள்களான கால்சியம், சோடியம், மெக்னீசியம் போன்றவை வியர்வையில் வெளியேறி விடும்.  இந்த  உப்புகள் இரத்தத்தில் குறைந்துவிடும்.  இதன் காரணமாக எலும்புத் தசையில் இறுக்கமும் இசிவும் உண்டாகி வலி ஏற்படும்.  இதற்குப் பெரும்பாலோர் அவர்களாகவே வலி நிவாரணி மாத்திரைகளைச் சாப்பிட்டுக் கொள்வார்கள்.  அது எரியும் தீயில் எண்ணெய் ஊற்றியது போலாகி விடும்.

வலி நிவாரணிகள் உடலில் மீண்டும் அதிக வியர்வையை உற்பத்தி செய்யும்.  உப்புகள் மேலும் வெயியேறும்.  இதனால் தசைவலி அதிகமாகும்.  எனவே, வெயில் காலத்தில் உண்டாகும் தசைப்பிடிப்பு வலிக்கு உப்பு கலந்த நீர், எலெக்ட்ரால் பவுடர், சர்பத், மோர், இளநீர், பதனீர் போன்ற திரவ ஆகாரங்களை அதிகம் பருகினால் முழு நிவாரணம் கிடைக்கும்.

தவிர்ப்பது எப்படி?   வெயில் காலத்தில் வெளியில் செல்பவர்கள் அவசியம் குடையோடு செல்ல வேண்டும்.  குழந்தைகள் வெயிலில் அழையக்கூடாது.  முதியோர், உடல்நலம் குறைந்தோர் வெயிலில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.  கண்களுக்குச் சூரியக் கண்ணாடியை (Sun Glass)  அணிந்து கொள்ளலாம்.  பருத்தி ஆடைகள் நல்லது.  இறுக்கமான ஆடைகளைத் தவிர்த்து விட்டு, தளர்வான வெள்ளை நிற ஆடைகளை அணிய வேண்டியது முக்கியம். விவசாயிகள், ஆடு மேய்ப்போர், தோட்ட  வேலை செய்பவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேல் வெயிலில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும்.   அதிகமான தண்ணீர் மற்றும் நீராகாரங்களைச் சாப்பிட வேண்டும்.  தினமும் குறைந்தது 3 லிட்டர் திரவம் உட்கொள்ள வேண்டும்.   இளநீர், பதநீரை விரும்பிச் சாப்பிடலாம், பப்பாளி, தர்ப்பூசணி, வெள்ளரிக்காய் கொய்யா, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, அன்னாசி, நுங்கு போன்ற நீர் நிறைந்த காய்களையும், கனிகளையும் கீரைகளையும் கோடையில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

காரம் மற்றும் மசாலா நிறைந்த சைவ மற்றும் அசைவ உணவுகள்.  எண்ணெய்ப் பலகாரங்கள், பேக்கரிப் பண்டங்கள் ஆகியவை தண்ணீர்த் தாகத்தை அதிகப் படுத்தும் என்பதால் இவ்வகை உணவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.  இட்லி, இடியாப்பம், தயிர் சாதம், மோர் சாதம், கம்பங்கூழ், வெங்காயப் பச்சடி, வெள்ளரி சாலட், பொன்னாங்கண்ணிக் கீரை, பீட்ருட், காரட், முள்ளங்கி, பாகல், தக்காளி ஆகியவை சிறந்த கோடை உணவுகள்.  பார்லி உணவு, மாம்பழம், கருப்புச் சாறு மற்றும் அசைவ உணவுகளைத் தவிர்க்கவும்.  வெயில் காலத்தில் தினமும் இரு வேளை குளித்தால் வியர்க்குரு, வேனல்கட்டி, படை, சொறி வராது, தண்ணீர் வசதி உள்ளவர்கள் மதிய வேளையிலும் குளிக்கலாம்.  தண்ணீர்ப் பற்றாக்குறை இருந்தால் துண்டைத் தண்ணீரில் நனைத்து உடலை அடிக்கடித் துடைத்துக் கொள்ளுங்கள்.  வெயிலில் அதிக நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டாம்.  வெயிலில் அதிக நேரம் வேலை செய்கின்றபோது கண்களில் எரிச்சல் ஏற்படும்.  அப்போது ஈரத்துணியைக் கண்களின் மீது போட்டு சற்றுநேரம் ஓய்வு எடுப்பது நல்லது.