பக்கவாதம்

பக்கவாதத்தைத் தடுக்க முடியுமா?
அவர் ஒரு  பெரிய தொழிலதிபர்.  துரதிர்ஷ்டவசமாக பக்கவாதத்தால் ஒரு கை, கால் செயலிழந்து, பேசவும் முடியாமல் படுத்த படுக்கையாகிவிட்டார்.  அவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு சிகிச்சை குணமளிக்கவில்லை.  அவரை வாரம் ஒரு முறை வீட்டுக்குச் சென்று பரிசோதித்து வருவேன்.  பக்கவாதம் தாக்கப்பட்ட முதல் சில நாள்களுக்கு உறவினர் கூட்டம் அலைமோதியது அவரது உடல்நிலை குறித்துப் பல கேள்விகள்.  நாளாக ஆக அவரைச் சுற்றியுள்ள கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே வந்தது.  சுமார் மூன்று மாதத்திற்குப் பின்பு அவருடன் கூட இருந்தவர் ஒரே ஒருவர் தான்.  அவர்தான் அந்த வீட்டு வேலைக்காரர்!  அந்தத் தொழிலதிபரை பார்த்ததும் எனக்கு இந்தப் பழமொழிதான் ஞாபகத்துக்கு வந்தது.

நடந்தால் நாடும் உறவாடும், படுத்தால் பாயும் பகையாகும்.

பக்கவாதம் அப்படி ஒரு கொடிய நோயா?
 அதற்கு தக்க சிகிச்சை உண்டா?  தக்க முன்னெச்சரிக்கை எடுக்காவிட்டால் பக்கவாதம் உயிரையே மாய்த்து விடும்.

நம் நாட்டில் சுமார் எண்பதாயிரம் மக்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இறக்கிறார்கள் என்பது நரம்பியல் நிபுணர்களின் கணிப்பு.

பக்கவாதம் எப்படி ஏற்படுளிறது?
மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் மடைபடுவதால் மூளையிலுள்ள செல்கள் செயலிழந்து அதனால் பக்கவாதம் ஏற்படுகிறது.

பக்கவாதத்தை ஆரம்ப நிலையிலேயே எப்படிக் கண்டறிவது?
பக்கவாத்தின் ஆரம்ப அறிகுறிகள் என்னென்ன?

என் நண்பர் ஒருவர் தனக்கு ஒரு சமயம் திடீரென்று ஒரு பக்கம், கை கால்கள் செயலிழந்து போய்விட்டதாக என்னிடம் கூறினார்.  இது பக்கவாதமா அல்லது வேறு நோயா?

நண்பர் கூறியது முற்றிலும் சரியே, இது பக்கவாதத்தின் முதல் அறிகுறிதான்.  இதை (mini stroke) (லேசான பக்கவாதம்)  என்று அழைக்கிறார்கள்.  இதன் அறிகுறிகள் பக்கவாத்தைப் போலவே இருக்கும்.  ஆனால் ஒரு சில நிமிடங்கள் அல்லது ஒரு சில மணிகளில் அதாவது 24மணி நேரத்திற்குள் பரிபூரணமாகக் குணமடைந்து பழைய நிலைக்கே பாதிக்கப்பட்டவர் வந்திடுவர்.  இது பக்கவாதம் வருவதற்கு ஒரு முன் எச்சரிக்கையே!  இப்படி பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கு, ஒரு சில மாதங்களிலேயே பக்கவாதத்தால் பாதிக்கப்படுவார்கள்!

பக்கவாதம் வருவதற்கு என்ன காரணங்கள்?
கீழக்கண்டவர்களுக்கு  பக்கவாதம் வரு வாய்ப்புகள் அதிகம். ஐம்பது வயதைத் தாண்டியவர்களுக்கு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்கவாதம் வரும்  வாய்ப்பு இரண்டு மடங்காக உயரும்.  ஆண்களுக்கு 33 வயது வரை பெண்களைவிட 30% வர வாய்ப்பு அதிகம்.  அதற்குப்பின் இரு பாலருக்கும் சமமாக வரும். குடும்பத்தில் பெற்றோர்களுக்கோ அல்லது அவர்களின் சந்ததியினருக்கோ பக்கவாதம் வந்தால், அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் வர வாய்ப்புண்டு.

லேசான பக்கவாதம் (mini stroke) வந்தவர்களுக்கு மீண்டும் பெரிய  அளவில் வர வாய்ப்புண்டு. உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மாரடைப்பு நோய் உள்ளவர்களுக்கும் மேலும், புகைப்பிடித்தல், மற்றவரின் புகையை சுவாசித்தல் (passive smoking),அளவுக்கு அதிகமாக மது அருந்துதல், இரத்தத்தில் அதிக கொழுப்புச் சத்து, உடற் பருமன், உடல் உழைப்பின்றி சும்மா இருப்பவர்களுக்கும் பக்கவாதம் வர வாய்ப்புண்டு.

இந்தப் பக்கவாதத்திற்கு தக்க சிகிச்சை உண்டா?
பக்கவாதம் வந்தவுடனே முதலில் இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மற்றும் ஈ.சி.ஜி. போன்ற அடிப்படை பரிசோதனைகளைச் செய்வார்கள்.  ஆனால் மிகவும் முக்கியமான பரிசோதனை, மூளை ஸ்கேன் ஆகும்.  இதன் மூலம் ஒருவருக்கு மூளையில் இரத்த ஓட்டம் குறைந்துள்ளதா?  அல்லது இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதா?  என்று உறுதியாகக் கண்டுகொள்ள முடியும்.

இரத்தக் கட்டி அடைப்பால் மூளைக்கு இரத்த ஓட்டம் குறைந்திருந்தால் அந்தக் கட்டியை கரைக்க ஆஸ்பிரின் மற்றும் இரத்தம் உறையாமல் இருக்கும் மாத்திரையைக் கொடுத்து மூளைக்கு இரத்த ஓட்டத்தை சீர்செய்ய முடியும்.  பக்கவாதம் இரத்தக் கசிவினால் ஏற்பட்டிருந்தால் அது சாதாரணமாக உயர் ரத்த அழுத்தத்தினால் வர வாய்ப்புண்டு.  அவர்களுக்கு இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மாத்திரையைக் கொடுப்பார்கள்.  இத்துடன் அவருக்கு (பிஸியோதெர·பி) இயன் முறை சிகிச்சை கொடுக்க வேண்டும்.  எல்லாவற்றையும் விட முக்கியம் மனஉறுதி.  நான் அவசியம் பக்க வாதத்திலிருந்து சரியாகி, மறுபடியும் பழைய நிலைக்கு வந்து நடக்க ஆரம்பித்து விடுவேன் என்ற மனஉறுதி மிக மிக அவசியம்.

பக்கவாதம் வராமல் தடுக்க வழியுண்டு.

உங்கள் குடும்ப டாக்டரிடம் தவறாமல் சென்று உங்களுக்கு இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இருதய நோய், உடற்பருமன் மற்றும் உடலில் கொழுப்புச் சத்து அதிகம் உள்ளதா என்பதைக் கண்டறிந்து தக்க சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.

தவறாமல் செய்யும் உடற்பயிற்சிக்கு, பக்கவாதத்தை வராமல் தடுக்கும் சக்தியுண்டு, மனப்பதட்டம், மன உளைச்சல் ஆகியவற்றைத் தவிர்க்க தியானம் மற்றும் பொழுதுபோக்குக் கலைகளில் மனதைச் செலுத்த வேண்டும்.

எந்தளவிற்கு காலம் தாழ்த்தாமல் சிகிச்சை பெறுகிறீர்களோ அந்த அளவிற்கு நோயிலுருந்தும் விடுதலை கிடைக்கும்.