சிறுவர்களும் சர்க்கரை நோயும்
Dr.எ.பன்னீர்செல்வம், சென்னை

    இளம் வயதினரையும் சர்க்கரை நோய் பரவலாக தாக்குகிறது. நூறு சர்க்கரை நோயாளர்களுள் ஒன்று முதல் நான்கு பேர் இருபது வயதுக்குட்பட்டவர்கள் (1 - 4% of Diabetic Population are less than 20 Years).

    இந்நோய்க்குண்டான காரணங்கள்: இந்நோய் சிறுவர்களிடையே வருவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால், பெற்றோர்களாகிய நீங்கள் அதில் குழப்பம் அடைய வேண்டாம். ஏனெனில் போலியோ, அந்நோய் கிருமியால் வருவது போல்(அ) தட்டம்மை, அந்நோய் கிருமியால் வருவதுபோல் வருவது போல் இந்நோய்க்கு இதுதான் காரணம் என திட்டவட்டமாகக் கூற இயலவில்லை.

    இந் நோயினுடைய அறிகுறிகள்: இந்நோயால் பாதிக்கப்டபட்ட குழந்தை திடீரென அடிக்கடி அதிகமாக சிறுநீர் கழிக்கும். அதிக தண்ணீர் குடிக்கும். அதாவது தாகம் அதிகமிருக்கும். பசி அதிகம் இருக்கும் அதிகம் சாப்பிட்டும் உடல் எடை வேகமாகக் குறையும். இவைகளை அலட்சியப்படுத்தினால் 48 மணி நேரத்திற்குள் (இரண்டு நாட்களுள்) குழந்தை நினைவிழந்த நிலைக்குச் சென்றுவிடும். அவ்வாறு சென்றால்கூட இரு நாட்களுக்கு முன்பு இதுபோன்ற தொந்தரவுகள் இருந்திருந்தால் சிகிச்சை அளிக்கும் மருத்துவரிடம் கூறவேண்டும். அவ்வாறு கூறுவில்லையெனில் மூளைக்காய்ச்சல் என நினைத்து சிகிச்சை அளிக்க நேரிடும்.

    நினைவிழந்த நிலையில் உள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது குறைந்தது ஒரு முறையாவது சர்க்கரையின் அளவை இரத்தத்திலும், சிறுநீரிலும் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.

    சிகிச்சை: இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் இருந்தால் இன்சுலின் ஊசியைப் போட்டு கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்து நினைவிழந்த நிலையில் உள்ள குழந்தையை மருத்துவர் பெரும்பாலும் குணமாக்கிவிடுவார். தக்க சமயத்தில் சென்றால் இது சாத்தியமாகும். இல்லையேல் சற்று சிரமம்தான். அதன்பின் பெற்றோர்கள் மிகச் கவனமாக செயல்பட வேண்டும். மீண்டும் குழந்தையை நினைவிழந்த நிலைக்குக் கொண்டே செல்லக்கூடாது. மருத்துவர் பரிந்துரை செய்யும் இன்சுலின் ஊசியை தொடர்ந்து போட்டுவர வேண்டும். பெரிய குழந்தையாய் இருந்தால் அவர்களே ஊசி போட பழகிக் கொள்வது நல்லது. சிறு குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஊசி போட கற்றுக் கொள்வது நல்லது. குறைந்தது இரு முறையாவது ஊசி போட்டால்தான் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். இன்சுலின் ஊசியை போட்டுக் கொள்ள மற்றவர் உதவியை நாடுவது நல்லதல்ல.

    ஏன் இன்சுலின் ஊசி? சிறுவர்களுக்கு ஏன் ஊசி தொடர்ந்து போட வேண்டுமெனில், அவர்களுக்கு இன்சுலின் சுரக்கும் பீட்டாசெல்கள் முற்றிலும் அல்லது பெருமளவு செயலிழந்துவிடுகின்றன. ஆகவே, உடலில் இவர்களுக்கு இன்சுலின் உற்பத்தியே இருக்காது. அல்லது போதுமானதாக இருக்காது. எனவே இவர்கள் இன்சுலின் ஊசியைத்தான் நம்பி வாழவேண்டியுள்ளது. ஊசியைத் தொடர்ந்து மருத்துவர் அறிவுரைப் படி போட்டு வந்தால் மற்ற குழந்தைகளைப் போலவே இவர்களும் இச்சமுதாயத்தில் நன்கு வாழலாம் தற்போது வாய்வழி இன்சுலின் வரவுள்ளது.

    உணவு முறை: உணவில் சில கட்டுப்பாடுகள் அவசியம் தேவைப்படுகிறது. இதைப் பெற்றோர்கள், மருத்துவரின் (அ) உணவு பரிந்துரையாளரின் அறிவுரைப்படி பக்குவமாக குழந்தைக்கு எடுத்துச் சொல்லி அனைத்து இனிப்பு வகைகளையும் சாப்பிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இது மிகவும் சிரமமான காரியம்தான். ஏனெனில் வீட்டிலும், பள்ளிக்கூடங்களிலும் மற்ற குழந்தைகளுடன் உள்ளபோது இவர்களை மட்டும் தனிமைப்படுத்துவது சற்று சிரமம்தான். ஆனால், வேறு வழியில்லை. மற்ற உணவு வகைகளை மருத்துவர் அல்லது உணவு பரிந்துரையாளர் அறிவுரைப்படி கொடுத்துவரலாம்.

    மற்ற நோய்கள் வரும்போது: மற்ற சில நோய்கள் ஏற்பட்டால்-உதாரணத்திற்கு வாந்தி, பேதி, சளி, ஜுரம், மலேரியா, டைபாய்டு போன்ற நோய்கள் வந்தால் அப்போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவைப் பார்த்து அதற்குத் தகுந்தாற்போல் மருத்துவரின் அறிவுரைப்படி இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். மற்ற நோய்க்கும் மருந்துகள் சாப்பிட வேண்டும். இவ்வாறு மற்ற நோய்க்கு சிகிச்சைக்கு செல்லும்போது சர்க்கரை நோய் சிகிச்சை பற்றிய தகவல்களை மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.

    பரிசோதனை: மாதம் ஒருமுறை சாப்பாட்டிற்கு முன்பு ஓர் இரத்தப் பரிசோதனை, எழுதிக் கொடுத்த அளவுஊசி போட்டுக் கொண்டு அரை மணிநேரம் பொறுத்து சாப்பிட்டுவிட்டு இரு மணி நேரம் பொறுத்து மீண்டும் இரத்தப் பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ளவேண்டும்.

    சாப்பாட்டிற்கு முன்: 80 - 120 மி.கி%

    சாப்பிட்டு இருமணி நேரம் பொறுத்து: 120-160 மி.கி.% வரை இருத்தல் நல்லது (இன்சுலின் ஊசியை போட்டுக் கொண்டு).

    தாழ் சர்க்கரை நிலை: அதே நேரத்தில் குழந்தை தாழ் சர்க்கரை நிலை (Low Sugar Hypoglycemia) க்கு சென்விடக்கூடாது. சர்க்கரையின் அளவு 60 மி.கி.குறைவானால் அதிக பசி, 'ஜில்' என வேர்த்துப் போதல், படபடப்பு, கைகால் நடுக்கம், மயக்கம், தெளிவு இன்மை, உளறல், நினைவிழத்தல், வலிப்பு முதலியன ஏற்படும், நினைவு இழப்பதற்கு முன் ஏதாவது ஓர் இனிப்பான திரவத்தை உடனே கொடுத்துவிட வேண்டும். நினைவிழந்து இருந்தால் உடனே மருத்துவரிடமோ (அ) மருத்துவமனைக்கோ அழைத்துச் செல்ல வேண்டும். இதற்காகத்தான் அனைத்து நீரிழிவு நோயாளிகளும் தங்களிடத்தில் ஓர் அடையாள அட்டையை வைத்துக் கொள்ள வேண்டும். அதில் முகவரி, தொலைபேசி எண், சிகிச்சை எடுத்துக் கொள்ளும் மருத்துவர் (அ) மருத்துவமனையின் முகவரி மற்றும் தொலைபேசி எண், இன்சுலின்ஊசி அளவு விவரம் முதலியன குறிக்கப்பட்டிருக்க வேண்டும். இது திடீரென சிகிச்சை அளிக்கும் மருத்துவருக்கு உபயோகமாய் இருக்கும்.

    மாற்று சிகிச்சை முறைகள்: இந்நோய்க்கு இந்நாள்வரை உலகம் முழுவதும் இன்சுலின் ஊசிதான் போடப்பட்டு வருகிறது. மற்ற சிகிச்சை முறைகளில் கட்டுப்பாடு அடைவதில்லை. குணமாவதும் இல்லை. ஆனால் பெற்றோர்கள் ஊசிக்குப் பயந்து கொண்டு மாற்று சிகிச்சை முறைக்கு (Alternative System of Medicine) குழந்தைகளை கொண்டு செல்கின்றனர். சில நாட்களுக்குள் இக்குழந்தைகள் இச்சிகிச்சை பலனின்றி மயக்க நிலையை அடைந்து, உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சேர்க்கப் படுகிறார்கள். மாற்றுச் சிகிச்சைக்கு தங்கள் மனம் செல்வதாய் இருந்தால்கூட அடிக்கடி இரத்தப் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும் (சில மாற்று சிகிச்சை மருத்துவர்கள் பரிசோதனை தேவையில்லை என தவறாக அறிவுரை கூறுகின்றனர்). பரிசோதனையில் சர்க்கரையின் அளவு அதிகம் இருந்தால் அச்சிகிச்சையை நிறுத்திவிட்டு இன்சுலின் ஊசியை போட்டுக் கொள்ள வேண்டும்.

    ஆய்வு: சர்க்கரை நோய்க் கட்டுப்பாடு மற்றும் அதன் பின்விளைவுகள் கட்டுப்பாடு (Diabetes Control and Complication Trial (DCCT) என்ற ஒரு பெரிய பத்து ஆண்டுகால ஆய்வு சமீபத்தில் அமெரிக்காவில் நடந்து முடிந்தது. அதனுடைய முடிவு என்னவெனில் சர்க்கரை நோயை நல்ல கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் அதனால் வரும் தொந்தரவுகள் தவிர்க்கப்படுவதோடு, பின்விளைவுகளான கண்கள் பாதிப்பு, சிறுநீரகம் பாதிப்பு, கால் நரம்புகள் பாதிப்பு முதலியன பெருமளவு தடுக்கப்படுகின்றன. மற்றும் தவிரர்க்கப்படுகின்றன. குழந்தைகள் இந்நோய் இருந்தும் ஆரோக்கியமாக வாழ முடிகிறது.

    ஆகவே பெற்றோர்களே, தங்கள் குழந்தைக்கு இந்நோய் வந்துவிட்டதே எனப் பயப்படவேண்டாம், சற்று எச்சரிக்கையுடன் சமயோசிதமாக மேற்கூறியபடி செயல்பட்டால் இந்நோய் இருந்தும் நோயற்ற மற்ற குழந்தைகளைப் போல் உங்கள் குழந்தைகளும் இருக்கும் (Normal life despite Diabetes).

    தமிழக அரசின் உதவி: இந்நோய் சிகிச்சைக்கு தொடர்ந்து பணச் செலவு இருப்பதால் அதாவது - இரத்தப் பரிசோதனைகள், இன்சுலின் ஊசி மருந்து, ஊசிகுழல்கள், மருத்துவர் செலவு என செலவுகள் ஒவ்வொரு நாளும் செய்யப்பட வேண்டியுள்ளது. நமது தமிழக அரசு கருணையுள்ளத்தோடு இக்குழந்தைகளுக்கு இன்சுலின் ஊசியை இலவசமாக வழங்க ஆணையிட்டுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது மற்றும் பாராட்டுக்குரியது. கிராமங்களில் வாழும் இளம் நீரிழிவு நோயாளிகள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் இம்மருந்தை வாங்கி போட்டுக் கொள்ளலாம். இதற்குமுன் இவ்வூசி மருந்தை போட்டுக் கொள்வதற்கு அன்றாடம் பெற்றோர்கள் குழந்தைகளுடன் மருத்துவமனைக்கு வரவேண்டியிருந்தது. கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகள் இறக்க நேரிட்டன. இவ்வாணைப்படி இந்நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும், பெற்றோர்களும் மேற்கண்ட இன்னல்களிலிருந்து விடுபட்டனர். இந்நோயை ஓர் உட்புற ஊனமாகக் கருதி இக்குழந்தைகளுக்கு அரசும், அரசு சாரா நிறுவனங்களும் சலுகைகள் வழங்கலாம்.

தாழ் சர்க்கரை என்றால் செய்யக்கூடியது...
சர்க்கரை இரத்தத்தில் சில நேரங்களில் இருக்கவேண்டிய அளவைவிடக் குறைந்துவிடும். இதற்கு தாழ் சர்க்கரை நிலை என்று பெயர். அதனுடைய அறிகுறிகள் மார்பில் படபடப்பு (அதிக இதய ஓட்டம்). பசி, 'ஜில்' என்று வேர்த்துப் போவது, மயக்கம், பார்வை மங்குதல், குடிபோதை போன்ற ஒரு நிலை (சில நேரங்களில் ) முதலியன, அவ்வாறு இருப்பின் அந்த நேரத்தில் உடனே சர்க்கரை அல்லது குளுக்கோஸ் கலந்து தண்ணீர் அல்லது பால் சாப்பிட்டுவிட வேண்டும். அல்லது ஏதாவது ஒரு பழம் அல்லது இனிப்பு திண்பண்டம் (சாக்லேட்) முதலியனவும் சாப்பிடலாம். நினைவு இழந்திருந்தால் வாய் வழியாக எதுவும் கொடுத்தல் கூடாது. மருத்துவரை உடனே பார்ப்பது நல்லது.


செய்யக்கூடாதது...
இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் இருந்தால், நீரிழிவு நோய் மருத்துவரை (அ) பொது மருத்துவரை ஆலோசிப்பது நல்லது. தாமாகவே மருந்துகள் எடுத்துக் கொள்ளக்கூடாது. மற்ற நோயாளி மருந்து சாப்பிடும் முறையை தானும் பின்பற்றக்கூடாது, அனைவரும் நீரிழிவு நோயாளியாக இருந்தாலும் சிகிச்சை முறைகளில் ஒருவருக்கொருவர் வித்தியாசங்கள் இருக்கும். அதே நபருக்குக் கூட சூழ்நிலைகளில் சிகிச்சை முறைகள், மாறும் ஆகவே, மருத்துவர் கூறும் அறிவுரைபடி நீரிழிவு மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

இமைகள்,
நவம்பர் 2004