முதுமையில் மாரடைப்பு (60+ கவனத்திற்கு...)
மரு.வி.எஸ்.நடராஜன், எம்.டி., டி.எஸ்.சி, சென்னை, முதுமை நல மருத்துவர்

 

    சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு முதியோர் ஒருவர் மாலையில் எனது கிளினிக்குக்கு வந்தார்.   காலையிலிருந்து மிகவும் களைப்பாய் இருப்பதாகவும், வீட்டுக்குள்ளேயே நடந்தாலும் மூச்சு விடுவதற்கு சிரமமாக இருக்கிறது என்று கூறினார்.  தனக்கு களைப்பைப் போக்க ஒரு டானிக்கும், மூச்சு சிரமமின்றி விடுவதற்கு ஒரு ஊசியும் போடுமாறு கேட்டுக் கொண்டார்.  நான் அவரைப் பா¢சோதித்ததில் அவருக்கு மாரடைப்பு நோய் ஏற்பட்டுள்ளதாக என் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது.  அதை உறுதி செய்ய ஒரு இ.ஸி.ஜி. எடுக்க வேண்டும் என்று கூறினேன்.

    அவர், எனக்கு நெஞ்சில் வலி ஏதும் இல்லையே... ஏதற்காக வீணாக செலவு வைக்கிறீர்கள்?  என்று மறுத்தார்.  நான் அவரிடம் முதலில் இ.ஸி.ஜி. எடுப்போம், அது சரியாக இருந்தால் பணம் வேண்டாம்.  அதில் கோளாறு இருந்தால் மட்டும் அதற்குண்டான தொகையைக் கொடுத்தால் போதும் என்று கூற, அவரும் அதற்கு சம்மதித்தார்.  உடனே இ.ஸி.ஜி. எடுக்கப்பட்டது. நான் எதிர்பார்த்தபடியே அவருக்கு மாரடைப்பு நோய் (massive heart attack) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  இதைக் கூறியதும் அவர் மிகவும் ஆச்சரியப்பட்டார்!  எனக்கு நெஞ்சுவலி சிறிது கூட இல்லையே எனக்கு எப்படி மாரடைப்பு நோய் வந்திருக்கக் கூடும்!  என்று கேட்டார்.  முதுமையில் நெஞ்சுவலி ஏதுமின்றி, தடீர் உடல் சோர்வு, மூச்சு வாங்குதல் மற்றும் மனக்குழப்பம் போன்ற தொல்லைகளே மாரடைப்பின் அறி குறிகளாக இருக்கும்.  இவைகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக இ.ஸி.ஜி. எடுத்து உறுதி செய்த கொள்வது நல்லது.

    வயதானவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதை எப்படிக் கண்டுகொள்வது?
நடுத்தர வயதில் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால் நெஞ்சில் கடுமையான வலி ஏற்படும்.  அது பரவலாக இருக்கும்.  இடது தோள்பட்டை மற்றும் இடதுகை உள்புறம் பரவும்.  பின்பு வலதுகை மற்றும் முதுகுக்கும் வலி பரவிச் செல்லும்.  நெஞ்சில் ஏற்பட்ட வலி கழுத்து பக்கவாட்டிலும், தாடைக்கும் செல்லும்.  இத்தோடு உடம்பு சில்லென்று வேர்த்துக் கொட்டும்.  மயக்கமும், வாந்தியும் ஏற்படலாம். இத்தகைய அறிகுறிகள் முதுமைக் காலத்தில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இருக்கும்.  மற்றொரு பங்கு, நோயின் அறிகுறிகள் மாறுபட்டுக் காணப்படும்.  அதாவது நெஞ்சில் வலி ஏதுமின்றி உடல் சோர்வு, களைப்பு, மூச்சு வாங்குதல், மயக்கம், கீழே விழுதல், பக்கவாதம் போன்ற தொல்லைகளே மாரடைப்பின் அறிகுறிகளாகத் தோன்றும் மேலும் ஒரு  சிலருக்கு மாரடைப்பின் அறிகுறிகள் ஏதுமின்றி மறைந்திருக்கும்,  இவர்களுக்கு நெஞ்சுவலியோ அல்லது மாரடைப்பைச் சார்ந்த எவ்விதத் தொல்லைகளுமே இருந்திருக்காது.  ஆனால் இ.ஸி.ஜி. யில் அவர்களுக்குத் தெரியாமல் மாரடைப்பு ஏற்பட்டது தெரிய வரும்.  இதை silent heart attack  என்று கூறுவார்கள்.  முக்கியமாக நீண்ட காலம் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அறிவுத்திறன் வீழ்ச்சி (Dementia) யினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இத்தகைய  silent heart attack வர வாய்ப்பு மிக அதிகம்.

 

முதுமையில் கொழுப்புச் சத்துக்கும், மாரடைப்புக்கும் பெரிதாக சம்பந்தம் இல்லை என்று கூறுகிறார்களே?
இது பற்றி இரண்டு விதமான கருத்துக்கள் உள்ளன.

1. முதுமைக் காலத்தில் கொழுப்புச் சத்து அதிகம் இருந்தால் மாரடைப்பு நோய் வர வாய்ப்பு அதிகம்.  ஆகையால் கொழுப்புச் சத்தைக் குறைக்க, தக்க சிகிச்சை செய்து கொண்டால் மாரடைப்பைத் தவிர்க்கலாம் என்பது ஒரு சாரா¢ன் கருத்து.

2. வயது ஆக ஆக உடலில் கொழுப்பச் சத்து சற்று அதிகமாக இருப்பது இயற்கையே, மேலும் பல ஆண்டுகளாக இப்படி அதிகமாக இருக்கும் கொழுப்புச் சத்தை திடீரென்று குறைப்பதினால் மாரடைப்பை பூரணமாகத் தடுக்க முடியும் என்று உறுதியாக் கூற முடியாது.  மேலும் கொழுப்புச் சத்தை குறைப்பதற்கான உணவுமுறை மற்றும் மாத்திரைகளினால் உடல்நிலை சோர்வடைந்து வாழ்க்கைத் தரம் மிகவும் பாதிக்கப் படுகிறது.  ஆகையால் முதுமையில் கொழுப்புச் சத்தை குறைக்க தீவிர சிகிச்சை அளிக்க வேண்டாம் என்பது மற்றொரு சாராரின் கருத்து.

    நடைமுறையில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம், நீரிழிவுநோய், உடற்பருமன், புகைப் பிடித்தல், குடும்பத்தில் யாருக்காவது மாரடைப்பு போன்ற தொல்லைகள் இருக்கும் முதியவருக்கு கொழுப்புச் சத்து அதிகமாக இருந்தால் அதைக் குறைக்க சிகிச்சை அளிக்கலாம்.  மேற்கண்ட தொல்லைகள் ஏது மில்லாமல் இருக்கும் ஒரு முதியவருக்கு, கொழுபுச் சத்து மட்டும் அதிகம் இருந்தால், அதைக் குறைக்க சிகிச்சை அளிக்க வேண்டாம் என்பது பெரும்பாலான டாக்டர்களின் கருத்து.

    முதுமையில் மாரடைப்பினால் ஏற்படும் தொல்லைகள் என்ன?
முதியவர்கள் மாரடைப்புக்கான சிகிச்சை பெறுவதில் காலதாமதம் ஆகிறது.  இதனால் அவர்கள் பல தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள்.

    இளைஞர்களைக் காட்டிலும் முதியவர்கள் மாரடைப்பால் அதிகம் பேர் திடீரென மரணமடைகிறார்கள்.  இதைத் தவிர இதயம் வலிமை இழத்தல், இதய ஓட்டம் மாறுபடுதல், நுரையீரலில் நீர்க்கோர்த்தல் போன்ற தொல்லைகள் முதுமைக் காலத்தில் அதிகம் வர வாய்ப்புண்டு.  திடீரென்று இரத்த ஓட்டம் மற்ற உறுப்புகளுக்குக் குறைவதால் சிறுநீரகக் கோளாறு மறறும் பக்கவாதம் போன்ற தொல்லைகளும் முதியவர்களுக்கே அதிகம் வரும். தொடர்ந்து படுக்கையில் படுத்திருப்பதால், தான் மற்றவர்களுக்குப் பாரமாக இருப்பதாக எண்ணி மனச் சோர்வும் ஏற்படும்.

    முதுமையில் மாரடைப்பு நோய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொள்வது நல்லது என்று சில டாக்டர்கள் கூறுகிறார்களே?
பெரும்பாலும் மாரடைப்பினால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு மருந்தினாலேயே நல்ல சிகிச்சை அளிக்க முடியும்.  ஒரு குறிப்பிட்ட சிலருக்கே அறுவை சிகிச்சை அவசியமாகிறது.

    உதாரணமாக சுமார் 64 வயதுள்ள ஒரு தொழில் அதிபருக்கு மாரடைப்பு நோய் ஏற்பட்டு இரண்டு இரத்தக் குழாய்களும் அடைபட்டு விட்டன.  அவருக்கு அறுவை சிகிச்சை அவசியம்.  ஏனெனில் அவருக்கு வேலை பளு அதிகம்.  தொழில் விஷயமாக உள் நாட்டிலும், அயல் நாடுகளிலும் அடிக்கடி பிரயாணம் செய்ய வேண்டியிருக்கும்.  அவரால் ஓய்வு அதிகம் எடுத்துக் கொள்ள முடியாது.  சாப்பாடு விஷயத்தில் ஓரளவுக்குத்தான் கட்டுப்பாட்டுடன் இருக்க முடியும்.  ஆகையால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டால் பழைய மாதிரியே அவர் தொடர்ந்து சுமார் 10,14 ஆண்டுகள் நலமாக வாழ்வார்.  இதற்கு மாறாக 64 வயதுடைய ஓய்வுபெற்ற ஒரு அரசு ஊழியருக்கு மாரடைப்பு நோய் ஏற்பட்டு, அவருக்கு இரண்டு இரத்தக் குழாய்கள் அடைபட்டு இருந்தால் அறுவை சிகிச்சை செய்து கொள்வது பற்றி சற்று சிந்திக்க வேண்டும்.  அவருக்கு நல்ல ஓய்வு.  உணவுக் கட்டுப்பாடு உடற்பயிற்சி மற்றும் மருந்துகளின் மூலமே தக்க சிகிச்சை அளிக்க முடியும். அவரும் இந்த சிகிச்சை முறையினால் சுமார் 10,14 ஆண்டுகள் எவ்விதத் தொல்லையுமின்றி வாழலாம்.  ஆகையால் முதுமையில் மாரடைப்புக்கு அறுவை சிகிச்சை அவசியமா?  இல்லையா?  என்பது பற்றி அந்தந்த நோயாளியின் நோயின் தன்மை, வயது, வாழக்கைத்தரம் ஆகியவற்றைப் பொறுத்தே ஆகும்!

முதுமையில் மாரடைப்பு நோயின்றி நலமாக வாழ என்ன வழி?
மாரடைப்பு நோய் ஓரளவுக்கு வராமல் தடுக்கக்கூடிய நோய்தான்.  கீழ்க்கண்ட முறைகளை நடுத்தர வயதிலிருந்தே கடைப்பிடித்தால் முதுமையில் மாரடைப்பு நோய் வராமல் தடுக்க முடியும்.

1. உடற்பயிற்சி மிகவும் அவசியம்.  தினமும் காலையில் 3-4 கி.மீ. தூரம் வேகமாக நடத்தல் மிகவும் அவசியம்.

2.  உடற்பருமனை உணவுக் கட்டுபாட்டின் மூலமும், உடற்பயிற்சியினாலும் குறைக்க வேண்டும்.

3. புகைபிடித்தலை அறவே ஒழிக்க வேண்டும்.

4. உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் ஆகியவற்றை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.

4. தியானம், ஆனமீக ஈடுபாடு மற்றும் பொழுது போக்குக் கலைகளில் மனதை ஈடுபடுத்தி அமைதியாக வைத்தக் கொண்டால் முதுமையில் மாரடைப்பு நோயின்றி நலமாக வாழ முடியும்.